தமிழக செய்திகள்

சென்னை பெருநகர பகுதிக்கான எல்லையை விரிவாக்கும் திட்டம்: ரூ.45.50 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு

சுற்றுச்சூழலுக்கு உகந்த பெருநகரப் பகுதியாக மாற்றுவதை இம்முழுமைத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சென்னை,

சென்னை பெருநகர பகுதிக்கான (1,189 ச.கி.மீ.) மூன்றாவது முழுமை திட்டத்தை இறுதி செய்யவும், விரிவாக்கப்பட்ட சென்னை பெருநகரப் பகுதிக்கான (5,904 ச.கி.மீ.) முழுமைத் திட்டத்தைத் தயாரிக்கவும் தமிழ்நாடு அரசு ரூ.45.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

ரூ.45.50 கோடி ஒதுக்கீடு

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின்படி, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் எதிர்கால வளர்ச்சியை வடிவமைக்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க முன்னெடுப்பாக, தற்போதுள்ள சென்னை பெருநகரப் பகுதிக்கான (CMA-1,189 ச.கி.மீ.) மூன்றாவது முழுமைத் திட்டத்தை இறுதி செய்யவும், விரிவாக்கப்பட்ட சென்னை பெருநகரப் பகுதிக்கான (5,904 ச.கி.மீ) ஒருங்கிணைந்த முழுமைத் திட்டத்தைத் தயாரிக்கவும், உலகளாவிய நிபுணத்துவம் வாய்ந்த ஆலோசகரை ஈடுபடுத்திட தமிழ்நாடு அரசு ரூ.45.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி

இவ்விரு பகுதிகளுக்கும் முழுமைத் திட்டங்களைத் தயாரிப்பதன் மூலம், நிலப் பயன்பாடு, போக்குவரத்து, பொருளாதார மேம்பாடு, வீட்டுவசதி, நீர்வளங்கள், வெள்ளம் மற்றும் கடலோரப் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக உள்கட்டமைப்பு, பொது வசதிகள் மற்றும் நகரமயமாக்கல் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தப்படும்.

மேலும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய நீண்டகால நோக்குடைய வளர்ச்சித் திட்டத்துடனான ஒருங்கிணைந்த கட்டமைப்பை விரிவாக்கப்பட்ட சென்னை பெருநகரப் பகுதிக்கு இத்திட்டம் வழங்கும். சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சியானது நீண்டகாலத் தொலைநோக்குப் பார்வை, அறிவியல் பூர்வமான திட்டமிடல் மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் அமைவதை உறுதி செய்வதில் இது ஒரு முக்கியப் படியாகும்.

எதிர்கால வளர்ச்சி

சென்னையின் எதிர்கால வளர்ச்சி என்பது தற்போதுள்ள நகர்ப்புற எல்லைகளைக் கடந்து, விரிவடைந்த பெருநகரப் பகுதி முழுவதையும் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக ஒருங்கிணைந்த ஒரு கட்டமைப்பாகக் கொண்டு அமைய வேண்டும் என்பதை இம்முயற்சி கருத்தில் கொண்டுள்ளது. இதன் மூலம், பெருநகரப் பகுதி முழுவதும் ஒருங்கிணைந்த, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சி உறுதி செய்யப்படும்.

உலகத்தரத்தில்

மேம்பட்ட புவிசார் தொழில்நுட்பங்கள், அறிவியல் பூர்வமான தரவு பகுப்பாய்வு மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனான விரிவான கலந்தாய்வுகள் ஆகியவற்றின் துணையோடு, விரிவான, ஒருங்கிணைந்த மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய அணுகுமுறை இத்திட்டமிடல் பணியில் பின்பற்றப்படும். சென்னை மற்றும் அதன் விரிவாக்கப்பட்ட பெருநகரப் பகுதியை உலகத்தரத்தில் போட்டியிடக்கூடிய, பொருளாதார வளம் மிக்க மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அனைவரையும் உள்ளடக்கிய பெருநகரப் பகுதியாக மாற்றுவதை இம்முழுமைத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT