தமிழக செய்திகள்

விபத்தில் பலியான கடை உரிமையாளர் குடும்பத்துக்கு ரூ.47 லட்சம் இழப்பீடு: சென்னை கோர்ட்டு தீர்ப்பு

எச்சரிக்கை விளக்குகளை ஒளிர செய்யாமல் சாலை ஓரத்தில் இருட்டான பகுதியில் லாரி நிறுத்தப்பட்டிருந்த காரணத்தினால் தான் இந்த விபத்து நடந்துள்ளது.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 38). இருசக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். கடந்த 8.1.2022 அன்று மிஞ்சூர் கும்மனூர்-புதூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

விசாரணை

இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதேவேளையில், லோகநாதன் மனைவி யமுனா இழப்பீடு கோரி சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி தர்மபிரபு, 'எச்சரிக்கை விளக்குகளை ஒளிர செய்யாமல் சாலை ஓரத்தில் இருட்டான பகுதியில் லாரி நிறுத்தப்பட்டிருந்த காரணத்தினால் தான் இந்த விபத்து நடந்துள்ளது.

தீர்ப்பு

எனவே, லாரி உரிமையாளர் தான் இந்த விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும். அந்தவகையில் லாரிக்கு இன்ஸ்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ள ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.47 லட்சம் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார்.