தமிழக செய்திகள்

அரசு பஸ்சில் ரூ.48 கூடுதல் கட்டணம் வசூல்: கண்டக்டருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

பழனி சென்னை செல்வதற்காக ஆரணியில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்தார்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் அடுத்த பாலுச்செட்டி சத்திரத்தை சேர்ந்தவர் பழனி. இவர் அந்த பகுதியில் சிறு கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 9-11-2024 அன்று பாலுசெட்டி சத்திரம் பைபாஸ் அருகே உறவினர்கள் 4 பேருடன் சென்னை செல்வதற்காக ஆரணியில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்தார்.

அப்போது பஸ் கண்டக்டர் அவரிடம் பாலுசெட்டி சத்திரத்தில் இருந்து சென்னை செல்வதற்கு டிக்கெட் வழங்காமல் ஆரணியில் இருந்து சென்னை செல்வதற்கான கட்டணத்தை அதாவது தலா ரூ.90 வீதம் 4 பேருக்கு ரூ.360 வசூலித்தார். இதனால் பழனி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விழுப்புரம் கோட்ட பொது மேலாளர் மற்றும் திருவண்ணாமலை கிளை மேலாளர் ஆகியோருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இவர் பயணித்த பஸ் குறித்த விவரங்களை சேகரித்தார்.

அப்போது இரு தரப்பில் இருந்தும் மேற்கண்ட பஸ்சை பாலுச்செட்டி சத்திரம் பஸ் நிலையத்திற்குள் சென்று தான் பின்னர் சென்னை நோக்கி இயக்க வேண்டுமென பலமுறை அறிவுறுத்தியும் இவர்கள் தங்களது பணியை சரிவர செய்வதில்லை என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தனர். இதனை மையமாக வைத்து பழனி கடந்த 17-11-2025 அன்று செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் பஸ் டிரைவர் சிவகுமார், கண்டக்டர் வீரதாலயன் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார்.

விசாரணையில் அரசு பஸ் டிரைவர் சிவகுமார், கண்டக்டர் எப்போதெல்லாம் விசில் அடிக்கிறாரோ அப்போதெல்லாம் நான் பஸ்சை நிறுத்தி இயக்குவேன் என்றும் எனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தார் இதனால் இந்த வழக்கில் அரசு பஸ் டிரைவரை விடுவித்தனர்.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி காசி பாண்டியன், ஜவகர் ஆகியோர் தீர்ப்பளித்தனர் அதில் 4 பேர் பயணம் செய்த கட்டணத்துக்கு கூடுதலாக ரூ.48 வசூல் செய்வது திருப்பி தர வேண்டிய வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம், மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கவேண் டும் என்று தீர்ப்பளித்தனர்.