தமிழக செய்திகள்

ரூ.4,800 கோடியில் மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க ரூ.410 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் குறித்து சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

பாதுகாப்பான மற்றும் தடையற்ற குடிநீர் விநியோகத் திட்டங்கள்

ரூ.4,800 கோடி மதிப்பீட்டில் வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் (Desalination Plant) அமைக்கப்படும்.

ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ரூ.500 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

மதுரை, கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த 1,000 கோடி ரூபாயும், பழமையான 33 கூட்டுக்குடிநீர் திட்டங்களைச் சீரமைக்க முதற்கட்டமாக 300 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.

சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க ரூ.410 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.

நவீன பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் மேலாண்மை

மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை அமைப்பைச் சீரமைக்க முதற்கட்டமாக ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

நாகர்கோவில் மாநகராட்சியில் விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும்,

குன்றத்தூர் மற்றும் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிகளிலும் ரூ.960 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சென்னை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்த ரூ.236 கோடி செலவிடப்படும்.

அறிவியல் பூர்வமான திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின் உற்பத்தி

திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.256 கோடி மதிப்பீட்டில் 9 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும், சேலம் மாநகராட்சியில் ரூ.291 கோடி மதிப்பீட்டில் 10 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும், 'திடக்கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் திட்டங்கள்* (Waste to Energy Projects) செயல்படுத்தப்படும். இத்திட்டங்கள் மொத்தம் ரூ. 547 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற சாலைகள் மற்றும் போக்குவரத்துக் கட்டமைப்பு

சாலைகளைச் சீரமைக்க, புதிய சாலைகள் அமைக்க, சென்னை உட்பட அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பள்ளிகளைச் சுற்றி, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சாலை வசதிகள் (Safe Access to Schools) மற்றும் 105 சாலை சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள் (Improvement of Traffic Islands) ரூ.110 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். பிற மாநகராட்சிகளிலும் இதேபோன்ற மேம்பாட்டுப் பணிகள் ரூ.165 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் அனைத்தும் ரூ.275 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டமாக செயல்படுத்தப்படும்.

நகர்ப்புற பசுமையாக்கல் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள்

பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு பசுமைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மக்கள் இயக்கமாக ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும். திருச்சி, திருப்பூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரிய பூங்காக்கள் ரூ. 130 கோடி செலவிலும், மாநிலம் முழுவதும் 250 புதிய பூங்காக்கள் ரூ. 175 கோடி செலவிலும், மொத்தம் ரூ. 305 கோடி செலவில் அமைக்கப்படும்.

பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு

புதிய வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் மொத்தம் ரூ.335 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

பாரம்பரிய நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களின் சீரமைப்பு

சிதம்பரம் நகராட்சியில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற தில்லை நடராஜர் திருத்தேர் விழாவை சிறப்பாக நடத்த கோவிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை, மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு கம்பிகளைத் தரைக்கு அடியில் கொண்டு சென்று, வீதிகளை நவீன முறையில் சீரமைக்க ரூ. 36 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

கடலூரில் புனித டேவிட் கோட்டை முதல் வெள்ளி கடற்கரை வரை ரூ.8 கோடி மதிப்பீட்டில் பாரம்பரிய நடைபாதை (Heritage Walk) அமைக்கப்படும். கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியை அழகுபடுத்தி,

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த ரூ.50 கோடி செலவிடப்படும்.

சமச்சீர் வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு

பெருநகர சென்னை மாநகராட்சியின் உட்கட்டமைப்பு வசதி குறைவாக உள்ள பகுதிகளில் சாலைகள், மழைநீர் வடிகால்கள், தெருவிளக்குகள், நடைபாதைகள், திடக்கழிவு மேலாண்மை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி செலவிடப்படும்.

போக்குவரத்து அலுவலகத்தின் சேவைகள் குறித்து சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

ஓட்டுநர் தேர்வில் (Driving Test) தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே Digital Driving Licence (டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம்) வழங்கப்படும். புதிய வாகனம் வாங்குவோர் Digital RC-யை இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாநிலம் முழுவதும் 15.09.2026 முதல் வழங்க வசதி ஏற்படுத்தப்படும்.

போக்குவரத்து சம்பந்தமான அனைத்து அலுவலக சேவைகளுக்கும் "Anywhere Registration /Licensing" என்ற முறையில் வசதிகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.

அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள் QR code-ஐ scan செய்து மின்னணு முறையில் ஆவணங்களை சரிபார்க்க முடியும். இந்த முறையினால், ஆவணம் தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளவும், அச்சிட்டுக் கொள்ளவும் முடியும்.

விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகள் குறித்து சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

கடந்த 2021 மே முதல் 2026 ஏப்ரல் வரை, தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.

ஜனநாயக உரிமைகளை மதிக்கும் நமது அரசு, கடந்த ஆட்சியாளர்களால் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியபோது அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும், அவர்களது நியாயமான கோரிக்கைக்களுக்கும் இவ்வரசு உறுதுணையாக நிற்கும்.

திருவண்ணாமலை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், சில விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் போடப்பட்டது. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக, விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற நோக்கத்தோடு, விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று போராடிய விவசாயிகள் மீதும் முந்தைய அரசால் மனித நேயமற்ற வகையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதோடு, சாமானிய மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

SCROLL FOR NEXT