சென்னை,
மதுரைக்கு ரூ.4,899... கோவைக்கு ரூ.6,154! ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளைக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டிருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டணக் கொள்ளையில் ஈடுப்பட்டிருக்கின்றன. அதைத் தடுக்க வேண்டிய கடமையையும், பொறுப்பையும் கொண்ட தமிழக அரசு, இந்தக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக இதுவரை பெயரளவில் கூட எச்சரிக்கை விடுக்காதது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் வரும் 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதையொட்டி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய இரு நாள்களான சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் 3 நாள்கள் தொடர் விடுமுறையைக் கொண்டாடும் வகையில், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வாழும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு நாளை செப்டம்பர் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகளில் திருச்சிக்கு ரூ.3,999 வரையிலும், மதுரைக்கு ரூ.4000 வரையிலும், கோவைக்கு ரூ.6154 வரையிலும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
வரும் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு திரும்ப திருச்சியிலிருந்து ரூ.4499, மதுரையிலிருந்து ரூ.4899, கோவையிலிருந்து ரூ.4799 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையிலிருந்து 300 கி.மீக்கும் குறைந்த தொலைவில் உள்ள கும்பகோணத்திற்கு செல்ல ரூ.3179 வரையிலும், அங்கிருந்து சென்னை திரும்ப ரூ.3419 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண விகிதத்தில் 4 பேர் கொண்ட குடும்பம் திருச்சிக்கு சென்று வர வேண்டும் என்றால் பேருந்துக்காக ரூ.34 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டும். இது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் மக்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை விட அதிக தொகையாகும். வரலாறு காணாத கட்டணக் கொள்ளைக்கு எடுத்துக்காட்டு இது தான்.
இந்தக் கட்டணக் கொள்ளையை தனியார் ஆம்னி பேருந்துகள் ரகசியமாகக்கூட செய்யவில்லை. இந்தக் கட்டண விவரங்கள் ஆன்லைன் முன்பதிவு இணைய தளங்களில் வெளியிடப்பட்டு முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து ஊடகங்களிலும் இந்தக்கட்டணக் கொள்ளை தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனாலும் இந்தக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க தவெக அரசு எதுவும் செய்யவில்லை.
திமுக ஆட்சியில் இருந்த ஐந்தாண்டுகளிலும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கொள்ளை கொடிகட்டி பறந்தது. இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியும், பிற கட்சிகளும் கண்டனம் தெரிவிக்கும் போது, பெயரளவுக்காகவாவது கட்டணக் கொள்ளையை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதைப் போல திமுக அரசு காட்டிக்கொண்டது. ஆனால், தவெக அரசு அதையும் செய்யவில்லை. மாறாக, திமுக ஆட்சியில் தனியார் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்பட்டதை விட 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தான் தவெக ஆட்சியில் ஏற்பட்ட மாற்றமா?
தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை ஆட்சியாளர்கள் தடுக்க வேண்டும்; அதற்காக கட்டண நிர்ணயக் குழுவை அமைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் பல முறை ஆணையிட்டிருக்கிறது. ஆனால், கடந்த காலங்களில் அந்த ஆணைகள் மதிக்கப்படவில்லை. ஆனால், தூய சக்தி என்று கூறிக் கொள்ளும் தவெக ஆட்சியிலும் அதே நிலை தொடர்வது கவலையளிக்கிறது. தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.