தமிழக செய்திகள்

ரூ.5 கோடி லஞ்ச புகார்: கைதான போலீஸ் இன்ஸ்பெக்டரை ஒரு நாள் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு அனுமதி

ஒரு நாள் மட்டும் சுகுமாறனிடம் விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

திருவையாறு,

ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வன்கொடுமை தடுப்பு சட்டம்

தஞ்சையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் பங்குதாரர்களிடையே உரிமை பிரச்சினை நிலவியது. இது தொடர்பாக இரு தரப்பினரும் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்திலும், மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்திலும் புகார் செய்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியின் நிர்வாகத் தலைவர் ஆர்.எம். பாஸ்கரன், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சி.பி.சி.ஐ.டி.

இந்த பிரச்சினையில் உள்நோக்கத்துடன், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தங்களை ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் போலீசார் செயல்பட்டு வருவதாகவும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக போலீஸ் டி.ஜி.பி.யிடம், ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குனர் சரவணன் புகார் செய்தார்.

ரூ.5 கோடி லஞ்சம்

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. பின்னர் நிர்வாக இயக்குனர் சரவணனிடம், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது. பங்குதாரர்கள் இடையேயான பிரச்சினையில் போலீசார் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும், மேலும் ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாகவும் சரவணன் கூறினார்.

இதைத்தொடர்ந்து தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா நகரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் வீட்டில் கடந்த 9-ந் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தி சுகுமாறனை கைது செய்தனர்.

பணியிடைநீக்கம்

அப்போது அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால். தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்தநிலையில் ஆஸ்பத்திரிக்கு கடந்த 10-ந் தேதி சென்ற குற்றவியல் நீதித்துறை நடுவர் விசாரித்து இன்ஸ்பெக்டர் சுகுமாறனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறனை பணியிடைநீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் உத்தரவு பிறப்பித்தார்.

விசாரணைக்கு அனுமதி

இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. வழக்குகளை விசாரிக்கும் தஞ்சை மாவட்டம் திருவையாறு குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் சுகுமாறன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 16-ந் தேதி நீதிபதி ஆக்னஸ்ஜெபகிருபா தள்ளுபடி செய்தார். இதைத் தொடர்ந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்த சுகுமாறன் தஞ்சாவூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

நேற்று திருவையாறு கோர்ட்டில் சுகுமாறனை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது சுகுமாறனிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் ஒரு நாள் மட்டுமே சுகுமாறனிடம் விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி ஆக்னஸ் ஜெபகிருபா உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT