சென்னை,
தமிழகத்தில் மாநில மரமான பனை மரத்தை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுத்து வருகிறது. கடும் வறட்சியை தாங்கி வளரும் பனை மரங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
நிலத்தில் மண் அரிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதற்கு பனை மரங்கள் பேருதவியாக உள்ளன. இதனால், பசுமை தமிழகம் திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பனை மரங்களை பாதுகாப்பதற்கான புதிய முயற்சிகளை, வனத்துறை எடுத்து வருகிறது. அதன்படி, பனையின் மரபணுவை பாதுகாக்க, புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “தமிழகத்தில் பனை மரத்தை பாதுகாக்க, நீண்டகால திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம்.
பனையின் மரபணு பண்புகளை வகைப்படுத்துதல், மரபணு மேம்பாடு ஆகியவற்றை அடிப்படை கூறுகளாக வைத்து, இத்திட்டம் செயல் படுத்தப்படும். பனை மரபணு பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்துக்கு, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.