சென்னை,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திராவிட மாடல் 2.0-வில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,000ஆக உயர்த்துவோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை ரூபாய் 5,000 வரவு வைக்கப்பட்டிருக்கிறது. 3 மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000-ம் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ.2,000ஆகவும் வரவு வைப்பு. தேர்தலைக் காரணம் காட்டி 3 மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த மு.க.ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத் தொகை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடைய செய்தியாகும்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் எதிர் நோக்கியுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளால் மகளிர் உதவித் தொகை செலுத்தும் நடவடிக்கை பாதிக்கப்பட்டு, அதனால் குடும்பத் தலைவிகள் சிரமங்களை சந்திக்கக் கூடாது என்ற பொறுப்புணர்வோடும், கோடைக் காலத்தில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை நாட்கள் என்பதாலும், குடும்பச் செலவுகள் கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு சிறப்பு நிதியாக ரூ.2,000 யையும் சேர்த்து, குடும்பங்களுக்கு தலா ரூ.5000 வீதம் வங்கியில் முன் கூட்டியே செலுத்தி விட்டு, அந்த இனிய தகவலை காணொளி வழியாக அறிவித்திருப்பது அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சமூக நீதி பார்வையும், பாலின சமத்துவம் நோக்கிய நடவடிக்கைகளையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மகிழ்வுடன் வரவேற்கிறது.
திராவிட மாடல் நல்லாட்சிக்கு மேலும் ஒரு மகுடம் இணைத்தது போலாகும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். தங்கத் தமிழகத்தில் பொங்கு புகழ் சேர்த்து வரும் திராவிட மாடல் நல்லாட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மேலான பொன்னான ஆட்சி காலமெல்லாம் தொடர்ந்து நீடிக்க இறையருள் துணை செய்யுமாக. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.