சென்னை,
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவோருக்கு இன்று காலையே ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான அறிவிப்பை வரவேற்கிறேன். ரூபாய் 5,000 மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதும், எதிர்காலத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 2,000 ஆக உயர்த்தி வழங்கப்பட இருப்பதும் மகிழ்ச்சியான செய்திகள்.
பெண்கள் கையில் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு ரூபாயும் மிகுந்த பொறுப்போடும்,கவனத்தோடும் செலவிடப்படும். வீட்டுக்கும், நாட்டிற்கும் பயன்படும். அவர்கள் அதை தங்களுக்காகவும் செலவு செய்ய வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் இந்த நேரத்தித்தில வெளிப்படுத்த விரும்புகிறேன்.
மகளிர் உரிமைத் தொகை அடுத்த இரண்டு மாதங்களுக்கு நமது சகோதரிகள் கையில் கிடைக்கக்கூடாது என்று சதி செய்த பாஜக அதிமுக கூட்டணியின் திட்டத்தை முதல்-அமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக முறியடித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.