மதுரை
ரூ.800 கோடி நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளிக்க குவிந்தனர்.
மதுரையை தலைமையிடமாக கொண்டு 2006-ம் ஆண்டு செயல்பட்ட டிஸ்க் அசெட்ஸ் லீடு இந்தியா லிமிடெட் மற்றும் டால் மார்க்கெட்டிங் சொலிசன் லிமிடெட், ஐயன் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் உள்பட 34 துணை நிறுவனங்கள் உமா சங்கர் ஜனார்த்தனன், அருண்குமார், சரவணகுமார் மற்றும் இவர்களது உறவினர்களால் நடத்தப்பட்டது.
இதில் தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், ஈரோடு, கோவை, நெல்லை, தூத்துக்குடி. கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, கேரளா மாநிலங்களை சேர்ந்தவர்கள் சேமிப்புகளை தொடங்கி உள்ளனர். 5 ஆண்டுகளில் 12.5 சதவீத வட்டியுடன் முதலீட்டு தொகையை சேர்த்து திரும்ப தருவதாக கூறி மக்களிடம் இருந்து சுமார் ரூ.1,137 கோடி திரட்டப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. அதில் 5 லட்சம் சேமிப்பாளர்களுக்கு ரூ.400 கோடிக்கு மேல் பட்டுவாடா செய்ததாகவும், மீதமுள்ள 8 லட்சம் பேருக்கு வழங்க வேண்டிய ரூ.800 கோடி தொகையை வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அளித்த புகாரின்பேரில் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை விரைந்து பட்டுவாடா செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது. ஆனால் இதுவரை பணத்தை திருப்பி வழங்கவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் பணத்தை இழந்த நூற்றுக்கணக்கானோர் நேற்று காலை மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு போலீஸ் அலுவலகம் முன்பு திரண்டனர். தங்கள் பணத்தை விரைந்து மீட்டு தருமாறு கோரி மனு அளித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.