சென்னை,
2025-26 அரவைப் பருவத்திற்கு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு, கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு கரும்பு கிரயத் தொகையை தாமதமின்றி வழங்குவதற்கு ஏதுவாக ரூ.86.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் 2025-26 அரவைப் பருவத்தில் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளும் மற்றும் 15 தனியார் சர்க்கரை ஆலைகளும் கரும்பு அரவைப் பணியை மேற்கொண்டுள்ளன.
கரும்பு விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட கழக அரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணையின்படி, 2025-26 ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், 2024-25 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு முன்எப்போதும் இல்லாத அளவிற்கு, டன் ஒன்றுக்கு ரூ.349/- சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்து, 90,652 கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.246.14 கோடி நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தலைமையிலான கழக அரசு பொறுப்பேற்றவுடன், ஒன்றிய அரசு நிர்ணயம் செய்த கரும்பு விலைக்குமேல் சிறப்பு ஊக்கத்தொகையாக முறையே 2020-21 அரவைப் பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.192.50/- எனவும், 2021-22 மற்றும் 2022-23 அரவைப் பருவங்களுக்கு ரூ.195/- எனவும், 2023-24 அரவைப் பருவத்திற்கு ரூ.215/-எனவும் 2024-25 அரவைப் பருவத்திற்கு ரூ.349/- எனவும் வழங்கி கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.2,750/-லிருந்து ரூ.3,500/- என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு 2021 முதல் 2026 வரையிலான கழக ஆட்சியில் சிறப்பு ஊக்கத்தொகையாக 5,77,755 கரும்பு விவசாயிகளுக்கு மொத்தம் சுமார் ரூ.1,094.27 கோடி வழங்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.