தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் ரூ. 1,370 கோடி புதிய முதலீடுகள்; தொழில் துறை அமைச்சருடன் நிறுவன தலைவர்கள் சந்திப்பு

தமிழ்நாட்டின் மீது இந்நிறுவனங்கள் கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

சென்னை

தமிழ்நாட்டில் ரூ. 1,370 கோடி புதிய முதலீடுகள் தொடர்பாக தொழில் துறை அமைச்சருடன் நிறுவன தலைவர்கள் சந்தித்து பேசினர்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக உயர்த்திட பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டும், வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தியும், இங்கிலாந்து நாட்டிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டும், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. மேலும், 2036-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

புதிய தொழில் முதலீடுகள்

இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய புதிய தொழில் முதலீடுகள் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு செல்வதாக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இத்தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.

இதனை மெய்ப்பிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் செயல்பட்டு வரும் ஹுவாஸின் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 850 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இம்முதலீடானது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்கள், உள்நாட்டு உற்பத்தி, திறன் மேம்பாடு மற்றும் புதிய திட்ட மேம்பாடு ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

5 ஆண்டுகள்

அதேபோன்று, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சியோன் இ-ஹுவா சம்மிட் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 520 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இம்முதலீடானது தொழில்நுட்ப மேம்பாடு, நவீனமயமாக்கல் மற்றும் புதிய வணிக மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

ஹுவாஸின் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் சியோன் இ-ஹுவா சம்மிட் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ரூ.1,370 கோடி புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கான விருப்ப கடிதங்களை இன்று (11.11.2026) தலைமைச்செயலகத்தில், தொழில் துறை அமைச்சர் ச. கீர்த்தனா அவர்களிடம் வழங்கினார்கள். இது தமிழ்நாட்டின் மீது இந்நிறுவனங்கள் கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், இ.ஆ.ப., சிறப்புச்செயலாளர் கே. விவேகானந்தன், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச்செயல் அலுவலர் தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT