சென்னை,
எஞ்சின் பழுதால் முரசு புயலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் (பொறுப்பு) உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆந்திரக் கடற்பகுதியில், சென்னை காசிமேட்டை சேர்ந்த மாயமான தமிழக மீனவர்கள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. கடந்த அக்டோபர் 29 அன்று விசைப்படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள், ஆந்திரக் கடற்பகுதியில் ஏற்பட்ட எதிர்பாராத எஞ்சின் பழுது மற்றும் கடுமையான முரசு புயலில் சிக்கி கடலில் மாயமாகினர். அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், தற்போது ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கோத்தப்பட்டினம் கடற்கரையில் அவர்களின் கவிழ்ந்த நிலையிலிருந்த விசைப்படகும், உயிரிழந்த மீனவர்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்ட செய்தி நம் அனைவரின் நெஞ்சையும் பிளப்பதாக உள்ளது.
இயற்கையின் சீற்றத்திற்கும் எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறுக்கும் இரையாகித் தங்கள் இன்னுயிரைத் துறந்துள்ள மீனவச் சகோதரர்களின் மறைவுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் வாழ்வாதாரத் தூணை இழந்து தவிக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஒட்டுமொத்த மீனவச் சமூகத்திற்கும் இந்த மீளாத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையை எல்லாம் வல்ல இறைவன் தந்தருளப் பிரார்த்திக்கிறேன். எஸ்.டி.பி.ஐ. கட்சி என்றும் உங்கள் துயரத்தில் பங்கெடுத்து, தோளோடு தோள் நின்று துணைநிற்கும்.
துயரத்தில் வாடும் இக்குடும்பங்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு உடனடியாக உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்கிட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்குத் தகுதிக்கேற்ப அரசு வேலை வாய்ப்பை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். ஆந்திராவில் கண்டெடுக்கப்பட்ட மீனவர்களின் சடலங்களை எவ்வித தாமதமுமின்றி அரசுச் செலவிலேயே அவர்களின் சொந்த ஊருக்குக் கொண்டு வர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.