தமிழக செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது

தூத்துக்குடி நகர் பகுதி வெள்ளபட்டி கடற்கரை பகுதியில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வெள்ளபட்டி கடற்கரைப் பகுதியில் இலங்கைக்குக் கடத்துவதற்காக லோடு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளைக் கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

பீடி இலைகள் கடத்திய லோடு வாகனத்தை துரத்தி பிடித்த போலீசார்

தூத்துக்குடி நகர் பகுதி வெள்ளபட்டி கடற்கரை பகுதியில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா, சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து மற்றும் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகிய போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு லோடு வாகனத்தை போலீசார் சோதனையிடுவதற்காக நிறுத்த முயன்றபோது, நிற்காமல் சென்றது. உடனே அந்த வாகனத்தை போலீசார் துரத்திச் சென்று தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகில் மடக்கிப் பிடித்தனர்.

ரூ.60 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

பிடிக்கப்பட்ட அந்த லோடு வாகனத்தில் சோதனை செய்தபோது அதில், இலங்கைக்கு கடத்துவதற்காக ரகசியமாக கொண்டுவரப்பட்ட 35 கிலோ எடையுள்ள 40 மூட்டை பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும்.

2 பேர் கைது

இதைத் தொடர்ந்து, அந்த லோடு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரான அருணாச்சலம் மகன் முத்துச்செல்வம் (வயது 24) மற்றும் உடன் இருந்த செந்திவேல் மகன் திருக்குமரன்(23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள், லோடு வாகனம் மற்றும் பிடிபட்ட 2 வாலிபர்கள் மேல் நடவடிக்கைக்காக தூத்துக்குடி சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT