தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, பரமன்குறிச்சி பிச்சுவிளையைச் சேர்ந்தவர் கோபி (வயது 45). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் ஏரல் பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் ராஜா என்பவருக்கு சொந்தமான சொத்தினை ரூ.90 லட்சத்திற்கு விலை பேசியுள்ளனர்.
இதற்கென முதற்கட்ட முன்பணமாக ரூ.72 லட்சத்தை அவரிடம் கோபி செலுத்தியுள்ளார். இதனை முன்பணமாக பெற்றுக் கொண்ட ராஜா மற்றும் அவரது மனைவி பொன்தெய்வம் ஆகிய இருவரும், மீதி தொகை ரூ.18 லட்சத்தை வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் வழங்கி கிரைய ஆவணம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என ஒப்பந்தம் செய்துள்ளனர்.
வங்கி கணக்கில் ரூ.72 லட்சம் பணம் ஏறியவுடன், ராஜா மற்றும் அவரது மனைவி பொன்தெய்வம் ஆகியோர் சொத்தை கிரயம் செய்து தராமல் கோபியுடனான தொடர்பை துண்டித்துள்ளனர். மேலும் தங்களது வீட்டைப் பூட்டிவிட்டு ஊரை காலி செய்துவிட்டு தலைமறைவாகினர். இதுகுறித்து கோபி அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர்.
தான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோபி, இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் ஏரலை சேர்ந்த ராஜா மற்றும் அவரது மனைவி பொன்தெய்வம் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில், பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ள ராஜா தமிழக வெற்றிக் கழகத்தின் நகர செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார் என்பது தெரியவந்தது.