சென்னை,
கடந்த சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பா.ஜனதா மாநிலத்தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணா மலை நீக்கப்பட்டார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, அரசியல் வட்டாரத்தில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
புதிய மாநிலத்தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் தலைமையில் பா.ஜனதா தேர்தலை சந்தித்தது. தேர்தல் களத்தில் அண்ணாமலை பட்டும்படாமல் பணியாற்றினார். அ.தி.மு.க.விடம் 27 இடங்களை கேட்டு வாங்கிய பா.ஜனதா, ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. கட்சியின் நட்சத்திர வேட்பாளர்களான மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோர் தோல்வியை தழுவினர்.
இதற்கிடையே, பா.ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து 5 பக்க கடிதத்தையும் அளித்தார். தொடர்ந்து, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும், தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந் தோஷையும் அவர் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் அண்ணாமலையிடம், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம், கொஞ்சம் காத்திருக்கவும் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்த நிலையில் பா.ஜனதாவில் இருந்து விலகிய அண்ணாமலை, தனிக்கட்சி ஒன்றை புதிதாக தொடங்க இருப்பதாகவும், அது மதசார்பற்ற கொள்கை கொண்ட கட்சியாகவும், தமிழ்நாட்டை அடிப்படையாக வைத்து இயங்கக்கூடிய கட்சியாகவும் இருக்கும் என்றும், முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்தியே அந்த கட்சி செயல்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புது கட்சி தொடர்பான அறிவிப்பை நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார். ஏற்கனவே தமிழக அரசியல் களத்தில் விஜய் புதுப்பாதையை வகுத்து, இளம் தலைமுறையினரின் ஏகோபத்திய ஆதரவுடன் ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருக்கிறார்.
இந்த சூழலில், ஏற்கனவே இளைஞர்கள் வட்டாரத்தை தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்ததோடு, தமிழக அரசியலில் புது சக்தியாகவும் உருவெடுத்து வந்த அண்ணாமலை தற்போது புதுக்கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் புதிய ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளார். அண்ணாமலையின் இந்த அதிரடி அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அண்ணாமலையை பாஜக இழக்கக்கூடாது என பிரதமர் மோடி -அமித்ஷாவுக்கு ஆர்எஸ்எஸ் சமிக்ஞை அனுப்பியுள்ளது. ஆர்எஸ்எஸ் தலையீட்டால் அண்ணாமலை டெல்லியிலேயே இருக்கிறார். அவரை சமாதனம் செய்யும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டு வருகிறது. டெல்லியிலேயே இருக்கும் அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்து, பிறந்தநாள் வாழ்த்துப் பெறுவதோடு தனது அரசியல் எதிர்காலம் குறித்தும் பேசத் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இன்று முழுமையாக டெல்லியில் இருந்துவிட்டு, நாளை அவர் சென்னை திரும்பத் திட்டமிட்டுள்ளார்.டெல்லி தலைமையின் சமாதானத்தை ஏற்று அண்ணாமலை பாஜகவிலேயே நீடிப்பாரா? அல்லது நாளை சென்னை வந்ததும் அவர் வெளியிடப் போகும் அந்த 'முக்கிய அறிவிப்பு' தமிழக பாஜகவை உடைக்குமா? என பல்வேறு கேள்விக்கான விடை தெரிய பொறுத்திருக்க வேண்டும்.