சென்னை,
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு உடனே அனுமதி வழங்க வேண்டும் என பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,
திமுகவின் இந்து விரோத கொள்கையை தவெகவும் பின்பற்றுகிறதா?
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு உடனே அனுமதி வழங்க வேண்டும்.
திமுக அரசைப் போலவே, சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அணிவகுப்புக்கு த.வெ.க., அரசு தடை விதித்துள்ளது. 1925ம் ஆண்டு விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டது. அதனால், ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியையொட்டி, நாடு முழுவதும் சீருடை அணிந்த தொண்டர்கள் அணிவகுப்பை ஆர்.எஸ்.எஸ். நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 70 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடந்து வருகிறது. ஆனால், கடந்த திமுக ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தடை விதித்ததுடன், எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு தொந்தரவு கொடுத்தனர். உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அனுமதி மறுத்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்றம் வரை சென்று அனுமதி பெற்றுதான் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை நடத்த வேண்டியுள்ளது.
இந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு. எனவே, நாடு முழுவதும் சீருடை அணிவகுப்புகள் நடந்து வருகின்றன. ஆனால், திமுக அரசைப் போலவே, தவெக அரசும் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்துள்ளது. இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள ஜம்மு காஷ்மீரில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கும்போது, தமிழ்நாட்டில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் அனுமதி மறுப்பது ஏன்?" கேள்வி எழுப்பியுள்ளது.
த.வெ.க. அரசு அமைந்த பிறகு முதல் - அமைச்சர் விஜய் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவராக காட்டிக் கொள்கிறார். ஆனால், திமுகவைப் பின்பற்றி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தடை விதிக்கிறார். இதுவரை தமிழ்நாட்டில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புகள், மிகவும் அமைதியாக, மக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடந்துள்ளன. அப்படியிருக்கும்போது எதற்காக இந்த தடை?
திமுகவில் பல ஆண்டுகள் பணியாற்றி, அதன் இந்து விரோதப் போக்கு ஊறிப்போன சிலர். த.வெ.க., அரசில் இருப்பதுதான் இதற்கு காரணமா? ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கான தடையை பார்க்கும்போது திமுக தான் தவெகவா என்ற கேள்வி எழுகிறது.
அனைவருக்கும் பொதுவானவர் என்று முதல் - அமைச்சர் ஜோசப் விஜய் சொல்வது உண்மையாக இருந்தால், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு அவர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.