ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு ஐகோர்ட்டு அனுமதி 
தமிழக செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்.. தாமதிக்காமல் அனுமதி வழங்க ஐகோர்ட்டு உத்தரவு

மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஐகோர்ட்டை நாடும் நிலையை போலீசார் ஏற்படுத்தமாட்டார்கள் என்று நம்புவதாக நீதிபதி தெரிவித்தார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, வருகிற 25 மற்றும் நவம்பர் 1-ந்தேதிகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கவேண்டும் என்று போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவன நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 128 இடங்களில், அக்டோபர் 18, அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு நாளில் அணிவகுப்பு ஊர்வலம் செல்ல அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ். மாநில செயலாளர் ஜெகதீசன் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் விசாரித்தார். அப்போது அரசு தரப்பில், வருகிற 25 மற்றும் நவம்பர் 1-ந்தேதிகளில் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல ஏற்கனவே ஐகோர்ட்டு வகுத்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படும் என ஆர்.எஸ்.எஸ். தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

காலதாமதம் செய்யக்கூடாது

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, “ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கும், அதைத்தொடர்ந்து நடத்தப்படும் பொதுக்கூட்டங்களுக்கும் அக்டோபர் 19-ந்தேதிக்குள் போலீசார் அனுமதி வழங்க வேண்டும். காலதாமதம் செய்யக்கூடாது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும், போலீசாரும் ஐகோர்ட்டு ஏற்கனவே வகுத்துள்ள விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு ஐகோர்ட்டு விதிமுறைகள் வகுத்து உத்தரவிட்டும்கூட விக்கிரமாதித்தன்-வேதாளம் கதை போல ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐகோர்ட்டை நாடவேண்டியதுள்ளது. எனவே, எதிர்வரும் ஆண்டுகளில் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்து, மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இந்த ஐகோர்ட்டை நாடும் நிலையை போலீசார் ஏற்படுத்தமாட்டார்கள் என்று நம்புகிறேன். இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்” என்று உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT