குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் ரப்பர் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ரப்பர் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் முக்கிய வேளாண் சார்ந்த உற்பத்தி பொருளான ரப்பரின் விலை கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. தென்னிந்தியாவில் முக்கிய ரப்பர் உற்பத்தி மாநிலமான கேரளத்திலும் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலும் செப்டம்பர் மாதம் இயல்புக்கு மாறாக கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால் ரப்பர் மரங்களில் பால் உற்பத்தி குறைவாக உள்ளது.
இதில் குறிப்பாக மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கத்தால் ரப்பர் பால் உற்பத்தி 30 சதவீதம் வரை குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் மலையோரப் பகுதிகளில் அவ்வப்போது மிதமான சாரல் மழை பெய்து வரும் நிலையில் பால் உற்பத்தி சற்று அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கேரளத்திலும், குமரி மாவட்டத்திலும் ரப்பர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று கோட்டயம் சந்தையில் வியாபாரி விலையாக ஆர்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ.271 ஆகவும், ஆர்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ.266 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ.256 ஆகவும் அதிகரித்து காணப்பட்டது.
அதே வேளையில் ரப்பர் வாரியம் வெளியிட்ட விலையில் ஆர்.எஸ்.எஸ். 4 தர ரப்பர் கிலோவுக்கு ரூ.279 ஆகவும், ஆர்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ.274 ஆகவும் இருந்தது. 80 சதவீத ஒட்டுப்பாலின் விலை கிலோவுக்கு ரூ.191 ஆக இருந்தது.
ரப்பரின் இந்த விலையேற்றத்தால் குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர். இது குறித்து குலசேகரத்தில் முன்னோடி ரப்பர் வியாபாரி ஒருவர் கூறுகையில்,
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையில் போர் நிலவி வந்த நிலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணை வரத்து பாதிக்கப்பட்டது. கச்சா எண்ணையில் இருந்து செயற்கை ரப்பர் தயாரிக்கப்படும் நிலையில், கச்சா எண்ணை வரத்து பாதிப்பால் செயற்கை ரப்பரின் விலை அதிகரித்தது. தொடர்ந்து இயற்கை ரப்பரின் விலையும் அதிகரித்து வந்தது. தற்போது கச்சா எண்ணையின் இறக்குமதி சீராகியுள்ளது. எனினும் ரப்பர் விலை அதிகரித்து வருகிறது.
இதற்கு ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும், ரப்பரின் தேவை அதிகரிப்பும் காரணமாகும். தற்போது நாட்டில் ரப்பரின் தேவையை விட உற்பத்தி குறைவாக உள்ளது. இதனால் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உற்பத்திக்கும், தேவைக்குமான இடைவெளி குறையும் போது விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.