தமிழக செய்திகள்

தமிழக அரசியலில் பரபரப்பு; அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர்.

சென்னை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றின. இதனால், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டது.

118 எம்.எல்.ஏ.க்கள் என்ற பெரும்பான்மை இல்லாத சூழலில், த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பயனாக காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் முழு ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்து விஜய் முதல்-அமைச்சராகி உள்ளார். த.வெ.க. பெரும்பான்மையை நிரூபிக்கும்போது, அக்கட்சிக்கு ஆதரவாக அ.தி.மு.க.வின் ஒரு தரப்பு எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டனர். அக்கட்சியின் மூத்த தலைவர் வேலுமணி தரப்பினர் த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், தமிழக அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதன்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகிய 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர். வேலுமணி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்களான அவர்கள் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர்.

இதனையடுத்து, அவர்கள் 3 பேரும் த.வெ.க.வில் இணைந்துள்ளனர். அவர்கள் ராஜினாமா செய்த தொகுதிகள் காலியான தொகுதிகளாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் நடத்தப்படும். அதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.