தமிழக செய்திகள்

இடைத்தேர்தலில் போட்டி; தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற வேட்பாளர்கள்

ஆளும் கட்சியான த.வெ.க. மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சென்னை

தமிழக சட்டசபைக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பரந்தாமன், சுகன்யா ஆகியோர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்து உள்ளது. இதில். அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதனால், காலியாக உள்ள 6 தொகுதிகளில், மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் களம் காண அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, ஆளும் கட்சியான த.வெ.க. மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதில், மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு தி.மு.க. முதல் கட்சியாக 2 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அதன்படி மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுகிறார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான பரந்தாமன், சுகன்யா ஆகிய இருவரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

SCROLL FOR NEXT