தமிழக செய்திகள்

பதவி தந்த ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்த பக்தர்களின் நம்பிக்கையை பலிகொடுப்பதா? டிடிவி தினகரன் கேள்வி

கடவுளுக்கு இணையாக ஆட்சியாளர்களை ஒப்பிட்டுத் துதி பாடுவதற்கு யார் அனுமதி வழங்கியது? என டிடிவி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

உணர்வுபூர்வமான நிகழ்வில்

”தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை அவமதிக்கும் விதமாக, கடவுளுக்கு இணையாக முதலமைச்சரையும் அறநிலையத்துறை அமைச்சரையும் துதி பாடிய வர்ணனையாளர்கள் – உணர்வுபூர்வமான இந்நிகழ்வில் பக்தர்களின் மனதை புண்படுத்திய வர்ணனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது, முருகப்பெருமானுடன் தமிழக முதலமைச்சருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் அரோகரா முழக்கமிட்ட இயல் இசை நாடக மன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அறங்காவலர் தேர்வுக்குழு உறுப்பினரும் பாடகருமான வேல்முருகன் ஆகியோரின் செயல் பக்தர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் அனுமதி வழங்கியது?

முருகப்பெருமானின் வீரத்தையும் அருளையும் போற்றிப் பாட வேண்டிய புனிதமான இடத்தில், தங்களுக்குப் பதவி வழங்கிய ஆட்சியாளர்களிடம் விசுவாசத்தைக் காட்டுவதற்காக, கடவுளுக்கு இணையாகத் தமிழக முதலமைச்சரையும் அமைச்சரையும் ஒப்பிட்டுத் துதி பாடுவதற்கு இவர்களுக்கு யார் அனுமதி வழங்கியது? பதவி தந்த ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக முருகப்பெருமானின் புனிதத்தையும், லட்சக்கணக்கான பக்தர்களின் இறைநம்பிக்கையையும் பலிகொடுப்பதா?

கடும் நடவடிக்கை

சாதி, மதம், அரசியல் கட்சி, ஆட்சி அதிகாரம் ஆகிய அனைத்தையும் கடந்து நடைபெறும் புனிதமான நிகழ்வைத் தனிநபர் புகழ்ச்சிக்கும் அரசியல் ஆதாயத்திற்கும் பயன்படுத்தியிருப்பது, தாங்கள் படும் துன்பங்களிலிருந்து விடுபடக் கடுமையாக விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட வந்திருந்த பக்தர்களின் நம்பிக்கையை ஏளனப்படுத்தி, அவர்களை அவமதிக்கும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.

எனவே, திருக்கோயில்களின் ஆன்மிகப் புனிதத்தையும் வழிபாட்டு மரபுகளையும் பாதுகாக்கத் தவறிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மீதும், சம்பந்தப்பட்ட வர்ணனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு இனிவரும் காலங்களில் இதுபோன்ற புனிதமான நிகழ்வுகளில் அரசியல் சார்ந்த தனிநபர் புகழ்ச்சிகளுக்கு எவ்விதத்திலும் இடமளிக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறையையும் தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT