கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தாயை இழந்த வேதனையில் பரிதாபம்: 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தாயை இழந்த மனவேதனையில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே உள்ள வடக்கநாடு புல்லாணிவிளையை சேர்ந்தவர் ரிங்கிள் ஜெயக்குமார்(48 வயது). இவர் வீட்டில் பசுமாடு வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி நிர்மல் சுனிதா. இவர்களுக்கு ரினோசியா (15 வயது) என்ற மகள் இருந்தார். ஒரு மகனும் உண்டு. மகள் பூவன் கோட்டில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நிர்மல் சுனிதா உடல்நலக்குறைவால் திடீரென இறந்து விட்டார். அவரது மறைவுக்கு பிறகு ரிங்கிள் ஜெயக்குமார் தனது 2 குழந்தைகளையும் மிகுந்த சிரமத்துக்கிடையே வளர்த்து வந்தார். இதற்கிடையே தாயார் இறந்ததில் இருந்தே ரினோசியா மனமுடைந்து காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், தாயை மறக்க முடியாமல் தவித்த ரினோசியா, தாங்கள் வசித்து வரும் வீட்டை விற்றுவிட்டு வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என தனது தந்தையிடம் அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக தந்தைக்கும், மகளுக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை ரிங்கிள் ஜெயக்குமார் வழக்கம்போல் பால் விற்பனை செய்ய தக்கலைக்கு சென்றுவிட்டார். பள்ளிக்கு சென்ற ரினோசியாவும், அவரது தம்பியும் மாலையில் வீடு திரும்பினர்.

சிறிதுநேரம் கழித்து வீட்டுக்கு வந்த ரிங்கிள் ஜெயக்குமார், பின்பக்க வாசலுக்கு சென்று பார்த்தபோது அங்கு ரினோசியா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மகளை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே மாணவி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து ரினோசியாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இதுபற்றி ரிங்கிள் ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தாய் இறந்த மனவேதனையில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.