தமிழக செய்திகள்

பராமரிப்பு பணியாளர்களுக்கு பாதுகாப்பு அரண்... காவிரி ரெயில்வே பாலத்தில் புதிய நடைபாதை

தொழிலாளர்கள் ரெயில்வே தண்டவாளத்தின் மையப்பகுதியில் நடந்து செல்ல வேண்டி இருந்தது.

ஈரோடு,

ஈரோடு காவிரி ரெயில்வே மேம்பாலத்தில் புதிய நடைபாதைகள் அமைக்கப்பட்டதால், ஆபத்தான பணிக்கு விடிவுகாலம் பிறந்து உள்ளது.

காவிரி ரெயில்வே மேம்பாலம்

ஈரோடு வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கேரள மாநிலத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது. ஈரோடு காவிரி ஆற்று ரெயில்வே மேம்பாலத்தில் இரு மார்க்கமாக செல்லும் ரெயில்கள் தடையின்றி செல்வதற்காக 2 ரெயில்வே தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

பயணிகள் ரெயில்கள், சரக்கு ரெயில்கள் என அதிகமான ரெயில்கள் கடந்து செல்வதால் அடிக்கடி பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது தண்டவாளத்தில் விரிசல்கள் உள்ளதா? போல்ட், நட்டுகள் சரியாக பொருத்தப்பட்டு உள்ளதா? 2 தண்டவாளங்களுக்கு இடையே உள்ள தூரம் சரியாக உள்ளதா? என்று நவீன எந்திரங்கள் மூலமாக கண்காணிக்கப்படுகிறது.

ஆபத்தான பணி

காவிரி ரெயில்வே மேம்பாலம் சுமார் 500 மீட்டர் நீளம் கொண்டது. 50 அடிகள் வரை உயரமுடையது. இதனால் ரெயில்வே மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் ஊழியர்களுக்கு பெரும் சவால் ஏற்படுகிறது. குறிப்பாக 300 மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டுமென்றாலும் ஊழியர்கள், தொழிலாளர்கள் ரெயில்வே தண்டவாளத்தின் மையப்பகுதியில் நடந்து செல்ல வேண்டி இருந்தது. அப்போது ரெயில் வந்துவிட்டால் உடனடியாக ஒதுங்குவதற்கு இடம் கிடையாது. இதனால் ஆங்காங்கே குறிப்பிட்ட தொலைவில் அமைக்கப்பட்டு உள்ள மேடையில் மட்டுமே விரைந்து ஓடிச்சென்று ஒதுங்கி நிற்க வேண்டும். எனவே ஆபத்தான முறையில் பணியாற்றி வந்தனர்.

நடைபாதை

இந்தநிலையில் ஊழியர்கள் பாதுகாப்பான முறையில் சென்று வரும் வகையில் இருபுறங்களிலும் புதிதாக நடைபாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்ட தூண்களில் நடைபாதை அமைக்கப்பட்டது. மேலும், பாலம் தொடங்கும் பகுதியில் புதிதாக இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. புதிய நடைபாதை அமைக்கப்பட்டதால் ஊழியர்களின் ஆபத்தான பயணத்துக்கு விடிவுகாலம் பிறந்து உள்ளது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, "காவிரி ஆற்று ரெயில்வே தண்டவாளத்தில் செல்ல வேண்டும் என்றால் தண்டவாளத்தின் நடுப்பகுதியில் மட்டுமே நடந்து செல்ல வேண்டி இருந்தது. ரெயில்கள் வரும்போது அவசர அவசரமாக ஒதுங்க வேண்டி இருக்கும். புதிதாக நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இனிமேல் ஊழியர்கள் ரெயில்வே தண்டவாளத்தின் வழியாக நடந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டிய இடத்துக்கு நடைபாதை வழியாக நடந்து செல்லலாம். புதிய நடைபாதை அமைக்கும் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டன", என்றனர்.

SCROLL FOR NEXT