சென்னை,
சைதாப்பேட்டை தொகுதிக்கு மா.சுப்பிரமணியண் கொண்டு வந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் ஓட்டு போட்டு இருந்தால் கூட வெற்றி பெற்று இருப்போம். அவர்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை காரப்பாக்கத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:1996-ல் இருந்து 2001 வரை இவ்வளவு சாதனையை செய்தீர்களே.. தோற்று விட்டீர்களே என்று கருணாநிதியிடம் சொன்னபோது, அவர் மிகுந்த உற்சாகத்தோடு சொன்னார். அடுத்த தேர்தல் வருகிறது. அதில் வெற்றி பெறுவதற்கு இப்போதுதான் வாய்க்கால் வெட்டிக்கொண்டு இருக்கிறோம். வாய்க்கால் வெட்டி விட்டால் தண்ணீர் தானாக வரும். 5 ஆண்டு காலம் கழித்து தண்ணீர் வரும். நாங்கள் வெட்டுகிற பாதையில் வரும் என்று கருணாநிதி அன்றைக்கு சொன்னார்.
அதையேத்தான் இன்று நானும் சொல்கிறேன். வீட்டு வரி எல்லாம் உயர்ந்துவிட்டது என்று பேசினார். அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை? ரொம்ப அக்கறையாக பேசுகிறீர்கள். வாயை மூடிவிட்டு சும்மா இருங்கள்.. எதுவாக இருந்தால் நமக்கு என்ன?ஏசி பஸ் ஸ்டாப் கட்டினீர்களே.. எல்லாம் விசிலுக்கு ஓட்டுப் போட்டுவிட்டு கஞ்சா அடித்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்கள். இனிமேலாவது கட்சி, கட்சி வரலாறு என்ன? எல்லாரும் சமமாக உட்கார்ந்து இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் யார்? என்று எல்லாம் சொல்லிக்கொடுங்கள்.
சைதாப்பேட்டை தொகுதிக்கு மா. சுப்பிரமணியன் கொண்டு வந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் ஓட்டு போட்டு இருந்தால்கூட வெற்றி பெற்று இருப்போம். அவர்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது வெளிப்படையாக சொல்கிறேன். காரணம் உயிர் காப்பது என்பது அவ்வளவு கஷ்டமான காரியம். எத்தனை பேர் உயிரைக் காப்பாற்றியிருப்பார். மக்கள் தங்கள் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுள்ளனர். சைதாப்பேட்டை தொகுதியில் மா. சுப்பிரமணியன் போல யாரும் செய்யவில்லை. இனிமேல் மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம். இனி கட்சிக்காரர்களுக்கு செய்யுங்கள், அது போதும். இனி ஒரு 5 ஆண்டுகளுக்கு ஓய்வு எடுப்போம்” என்றார்.