தமிழக செய்திகள்

சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு: எவ்வளவு தெரியுமா?

மொத்தம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 160 பேர் சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவை நடத்துவதற்கு ஒரு தலைமை அதிகாரி இருப்பார். அவருக்கு உதவியாக 3 வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் இருப்பார்கள். அந்த வகையில், மொத்தம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 160 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைப்பு

இந்த முறை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கூடுதலாக ஊதியம் வழங்கப்பட இருக்கிறது. அதாவது, 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.

அந்த வகையில், தேர்தல் நாளுக்கான ஊதியம் மற்றும் 2 நாட்கள் கட்டாய பயிற்சிக்காக, தேர்தல் ஆணையம் ஒரு வாக்குச்சாவடிக்கு சுமார் ரூ.12,500 ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் தமிழக சட்டசபை தேர்தலுக்கான மொத்த செலவு சுமார் ரூ.100 கோடியாக உயர்ந்துள்ளது. 

ஊதிய உயர்வு எவ்வளவு?

2014-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.350 ஊதியம் பெற்று வந்த தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், இப்போது ஒரு நாளைக்கு ரூ.500 அல்லது மொத்தமாக ரூ.2 ஆயிரம் பெறுவார்கள். ஒரு நாளைக்கு ரூ.250 கௌரவ ஊதியமாக பெற்று வந்த வாக்குச்சாவடி அலுவலர்கள், இப்போது ஒரு நாளைக்கு ரூ.400 அல்லது மொத்தமாக ரூ.1,600 பெறுவார்கள்.

பணியாளர்கள் மற்றும் செலவு

மொத்த வாக்குச்சாவடிகள்: 75,032

ஒரு சாவடிக்கு பணியாளர்கள்: 5

தலைமை அதிகாரி: ரூ.3 ஆயிரம் (இரண்டு நாட்கள் பயிற்சி உட்பட)

வாக்குச்சாவடி அலுவலர்கள் (3 உறுப்பினர்கள்): தலா ரூ.2,600

அலுவலக உதவியாளர்: ரூ.1,700.

மொத்த செலவு: ரூ.100 கோடி.