கோயம்புத்தூர்,
தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தததில் 3 பெண்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை பாரதி நகரை சேர்ந்தவர் கவுதம் ( வயது 34). இவர் கேரள மாநிலம் மீனாட்சிபுரம் பகுதியில் லாட்டரி சீட்டு கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் பதுக்கி வைத்து, வாட்ஸ்-அப் செயலி மூலம் விற்பனை செய்து வருவதாக கோவை மாவட்ட எஸ்.பி. பவன்குமார் ரெட்டிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையில் சப் - இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் போலீசார்கள் இணைந்து கவுதம் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நடத்தப்பட்ட சோதனையில் அங்கு 5,900 கேரள மாநிலம் லாட்டரி சீட்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கவுதம் மற்றும் அவரது உறவினர்கள் ஜெயசவுந்தராயன் (32), ஜீவானந்தம் (26) உள்ளிட்டோர் கேரள மாநில ஓணம் பம்பர் லாட்டரி சீட்டுகளின் புகைப்படங்களை வாட்ஸ்-அப் செயலி மூலம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி, ஆன்லைன் வாயிலாக பணம் பெற்று விற்பனை செய்து வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து கவுதம், ஜெயசவுந்தரயன், ஜீவானந்தம் மற்றும் 3 பெண்கள் என மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்த 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.