தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை - இருவர் கைது!

14 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.85 ஆயிரம் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் சட்டவிரோதமாகத் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து, 14 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.85 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் முள்ளக்காடு ராஜீவ் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் முத்தையாபுரத்தைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் (42) மற்றும் சாயர்புரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (27) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 14 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் விற்பனை மூலம் கிடைத்ததாகக் கூறப்படும் ரூ.85 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, புகையிலை பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டன மற்றும் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.