சென்னை,
அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் மக்களுக்கு விநியோகிப்பதற்கும் உருவாக்கப்பட்ட கூட்டுறவு அமைப்புகளை இப்போது மது விற்பனை நிலையங்களாக மாற்றுவது கண்டிக்கத்தக்கது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
டாஸ்மாக்’ கடைகளுக்கு இணையாகக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமும் மதுபானங்களை விற்பனை செய்ய தவெக அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. “கூட்டுறவே நாட்டின் உயர்வு” என்பார்கள்; ஆனால், மது விற்பனைக்குக் கூட்டுறவு சங்கங்களை பயன்படுத்தும் தவெக அரசின் செயல், நாட்டின் வளர்ச்சியைத் தடுத்து வீழ்ச்சியடையவே செய்யும். விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கும், அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் மக்களுக்கு விநியோகிப்பதற்கும் உருவாக்கப்பட்ட கூட்டுறவு அமைப்புகளை இப்போது மது விற்பனை நிலையங்களாக மாற்றுவது கண்டிக்கத்தக்கது. இது கூட்டுறவின் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கும் செயலாகும்.
தவெக ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதாக மார்தட்டிய முதல்-அமைச்சர் விஜய், இப்போது கூட்டுறவுச் சங்கங்கள் வரை மது விற்பனையை விரிவுபடுத்துவது அவரது இரட்டை வேடத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது. தேர்தல் நேரத்தில் பெண்களைத் தாய், தங்கை என அழைத்துவிட்டு, இப்போது அவர்களது குடும்பத்தைச் சீரழிக்கும் வகையில் மதுவைத் தாராளமாகப் புழங்கவிட முயல்வது பெண்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்.
ஏற்கெனவே தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் தடையின்றி மது விற்பனை நடைபெற்று வரும் சூழலில், இந்த நடவடிக்கை கிராமப்புறங்களிலும் எளிதாக மது கிடைக்கும் நிலையை உருவாக்கும். இது ஏழை எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதோடு, சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளையும் அதிகரிக்கும். எனவே, தமிழக அரசு உடனடியாக இந்தத் தவறான முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.