சேலம்,
கோவையை சேர்ந்த பிரபு (46), அங்குள்ள தனியார் நகைக்கடையில் பணியாற்றி வருகிறார். அந்த கடையில் தயாரிக்கப்படும் தங்க நகைகளை திருவண்ணாமலையில் உள்ள நகைக்கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதை வழக்கமாக செய்து வருகிறார்.
அதன்படி, கடந்த 23-ஆம் தேதி 402 கிராம் எடை கொண்ட 41 தங்கச் செயின்களை எடுத்துக்கொண்டு திருவண்ணாமலை சென்றார். அங்கு வழக்கமாக செல்லும் நகைக்கடைகளில் புதிய நகை மாடல்களை விற்பனை செய்ய முயன்றார். ஆனால் அவை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இல்லாததால், புதிய நகைகளுடன் பழைய நகைகளையும் சேர்த்து மொத்தம் 58 பவுன் தங்க நகைகளுடன் அரசு ஏ.சி. பேருந்தில் கோவைக்கு புறப்பட்டார்.
பேருந்து சேலம் அருகே அயோத்தியாப்பட்டணத்தில் தேநீர் இடைவேளைக்காக நின்றபோது, பிரபு தனது இருக்கையில் நகைகள் இருந்த பையை வைத்துவிட்டு கீழே இறங்கி சென்றார். பின்னர் மீண்டும் பேருந்தில் ஏறியபோது, நகைகள் இருந்த பை மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து காரிப்பட்டி காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரில், தனது இருக்கையின் பின்புறம் அமர்ந்திருந்த இருவர் தேநீர் இடைவேளைக்குப் பிறகு பேருந்தில் மீண்டும் ஏறவில்லை என்றும், அவர்கள் நகைகளை திருடியிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலையிலிருந்தே மர்மநபர்கள் பிரபுவை பின்தொடர்ந்து வந்தார்களா? அல்லது பிரபுவே திட்டமிட்டு நகை திருட்டு நாடகம் ஆடுகிறாரா? என்ற இரு கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், நகை திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், பேருந்து நின்றிருந்த தேநீர் கடைகளின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், பயணிகள் தேநீர் குடித்துக்கொண்டிருந்த நேரத்தில் பேருந்தின் பின்புறம் கார் ஒன்று நின்றிருந்ததும், அதில் சிலர் ஏறி வேகமாக புறப்பட்டுச் சென்றதும் பதிவாகியிருந்தது.
இதையடுத்து, இந்த திருட்டில் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் தொடர்புடையிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதனால் ஒரு தனிப்படை திருவண்ணாமலைக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறது. மேலும், பிரபுவின் பயண விவரங்களை அறிந்து முன்கூட்டியே திட்டமிட்டு மர்மநபர்கள் செயல்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், மற்றொரு தனிப்படை கோவையில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.