தமிழக செய்திகள்

சேலம்: வெயிலில் இருந்து தப்பிக்க ஆட்டோவில் குளுகுளு வசதி

சேலத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர், வெயிலை சமாளிக்க ஆட்டோவின் மேற்கூரை மீது தெர்மாகோல், வைக்கோல், சோளத்தட்டை ஆகியவற்றை கட்டி அதன் மீது எப்போதும் நீர் தெளிக்கும் வகையில் மோட்டாரும் பொருத்தியுள்ளார்.

சேலம்,

சேலத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 100 டிகிரியை தாண்டி வெயிலின் அளவு பதிவாகி வருகிறது. இந்த நிலையில் வெயிலினால் பயணிகள் பாதிக்காமல் இருப்பதற்காக டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில் குளுகுளு வசதி அமைத்துள்ளார்.

சேலம் மாமாங்கம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 77). இவர் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில் அவர் சுட்டெரித்து வரும் கோடை வெயிலை சமாளிக்க ஆட்டோவின் மேற்கூரை மீது தெர்மாகோல், வைக்கோல் மற்றும் சோளத்தட்டை ஆகியவற்றை கட்டி அதன் மீது எப்போதும் நீர் தெளிக்கும் வகையில் மோட்டாரும் பொருத்தி உள்ளார்.

அதன் மூலம் பயணிகளுக்கு வெயிலின் தாக்கம் ஏற்படாது. மேலும் மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் தண்ணீர் வசதியும் ஏற்படுத்தி உள்ளார். இது பயணிகளை கவரும் வகையில் உள்ளது.