தமிழக செய்திகள்

சேலம்: தகுதியற்ற பேருந்துகளை இயக்கிய தி.மு.க. அரசு தான் விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்- அன்புமணி

சேலத்தை அடுத்த உத்தமசோழபுரத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சேலத்தை அடுத்த உத்தமசோழபுரத்தில் தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து சாலையில் வந்த வாகனங்கள் மீது மோதியதில் அவற்றில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்து உத்தமசோழபுரம் சூளைமேடு அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பைத் தாண்டிச் சென்று எதிர்த்திசையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர ஊர்தி மற்றும் வேன் மீது பயங்கர வேகத்தில் மோதியது. அதில் இரு சக்கர ஊர்தியில் பயணித்த இருவரும், வேனில் பயணித்த 11 மாத குழந்தை உள்ளிட்ட 5 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

பேருந்தில் பிரேக் பிடிக்காததும், ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் பேருந்து இல்லாததும் தான் விபத்துக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே ஆட்சியாளர்கள் கொள்ளையடிப்பதற்காக மட்டுமே அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பயன்படுத்தப்பட்டன. அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான 90 சதவீதம் பேருந்துகள் அவற்றின் ஆயுள்காலத்தைக் கடந்து இயக்குவதற்கு தகுதியற்ற நிலையில் இருப்பதாக நான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தேன். இந்த விபத்தின் மூலம் எனது குற்றச்சாட்டு உறுதியாகியிருக்கிறது.

தகுதியற்ற பேருந்துகளை இயக்கிய தி.மு.க. அரசு தான் இந்த விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த விபத்தில் படுகாயமடைந்த வேனின் ஓட்டுநர் மேகநாதன் உள்ளிட்ட அனைவருக்கும் தரமான மருத்துவம் வழங்கவும், அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.