போதை ஆசாமி 
தமிழக செய்திகள்

சேலம்: அரசு பஸ் முன் படுத்து போதை ஆசாமி அராஜகம் – பயணிகள் அவதி

"படிக்கட்டுல உட்காந்தா தப்பா? ரூல்ஸ் இருக்கா இல்லையா?" எனக் கூச்சலிட்டு போதை ஆசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அரசு பஸ் முன் படுத்து அராஜகம் செய்த போதை ஆசாமியால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

போதை ஆசாமி

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்து ஒன்று புறப்படத் தயாரானது. அப்போது, மது போதையில் இருந்த பயணி ஒருவர், பேருந்தின் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்ய முயன்றார்.

அதனைக் கண்ட பஸ்சின் நடத்துனர், விபத்து அபாயத்தைத் தவிர்க்கும் பொருட்டு, அவரைப் படிக்கட்டில் அமரக் கூடாது என எச்சரித்துக் கண்டித்தார். மேலும், பஸ்சின் தானியங்கி கதவும் மூடப்பட்டது.

பஸ் முன் படுத்து ரகளை

நடத்துனரின் கண்டிப்பால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி, பஸ்சில் இருந்து இறங்கி, "படிக்கட்டுல உட்காந்தா தப்பா? ரூல்ஸ் இருக்கா இல்லையா?" எனக் கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதோடு நிறுத்தாமல், பேருந்தை செல்ல விடாமல் அதன் முன்பக்கச் சக்கரத்தின் அருகே சாலையில் நேராகப் படுத்துக்கொண்டு அடம் பிடித்தார்.

பயணிகள் கடும் அவதி

போதை ஆசாமியின் இந்த அராஜகத்தால் பஸ் நிலையத்திற்குள் பிற வாகனங்கள் வந்து செல்வதில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் பஸ் நிலையத்திற்கு வந்த பொதுமக்கள் அனைவரும் அவரது செயலால் அவதிக்குள்ளாகினர்.