சேலம்,
மோகனூர் மற்றும் நாமக்கல் ரெயில் நிலைய யார்டுகளில் தண்டவாளம் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக சேலம்-மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறையில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16811) நாளை (புதன்கிழமை) 24, 26, 28, 31 மற்றும் ஆகஸ்டு 2 ஆகிய தேதிகளில் கரூர் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். இந்த ரெயில் மயிலாடுதுறையில் இருந்து கரூர் வரை மட்டுமே இயங்கும். கரூரில் இருந்து சேலம் வரை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்க மாக சேலத்திலிருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய சேலம் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (16812) நாளை 24, 26, 28, 31 மற்றும் ஆகஸ்டு 2 ஆகிய தேதிகளில் சேலத்திற்கு பதிலாக கரூரில் இருந்து மதியம் 3.40 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்படும். இந்த ரெயில் சேலத்தில் இருந்து கரூர் வரை இயக்கப்படாது. இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.