சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சேலம் மாநகரின் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர், வறுமை நிலையில் உள்ள பெண்களுக்கு கடன் தருவதாக ஏமாற்றி பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்திய செய்தி நெஞ்சத்தை பதற வைக்கிறது. இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பான விசாரணையில் இதுவரை 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மணிகண்டன் நேற்று முன்தினம் (12.06.2026) கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மணிகண்டனின் அரசியல் பின்னணி குறித்தும் தீவிரமாக விசாரித்து அதன் விபரத்தை வெளிப்படுத்த வேண்டும். பாலியல் வன்கொடுமை குற்றச் செயல்கள் அன்றாடம் நடைபெற்று வருவது பெரும் வேதனையளிக்கிறது. புதிய ஆட்சி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய “சிங்கப்பெண் சிறப்புப் படை” அமைத்துள்ளது. இதன் பணியை முழுவீச்சில் விரிவு படுத்த வேண்டும்.
சேலம் பாலியல் வன்கொடுமை குற்றச் செயல்களில் மணிகண்டன் ஒருவர் மட்டுமே குற்றவாளி என விசாரணை எல்லையை சுருக்கி விடாமல், அவருக்கு பின்பலமாக இருந்து செயல்பட்ட நபர்கள் யார், யார் என்பது உட்பட குற்றச் செயலின் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்துவது அவசியமாகும்.
நீண்ட காலமாக வணிக முறையிலான குற்றச் செயல்கள் நடந்து வந்துள்ள நிலையில், அது காவல்துறையினர் கவனத்துக்கு வராமல் இருந்திருக்க முடியாது என்ற ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது. எனவே, இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வழக்கை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.