தமிழக செய்திகள்

சேலம்: ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

படிக்கட்டு ஓரமாக நின்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

சேலம்,

புனே-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ஜோலார்பேட்டையை கடந்து சேலம் நோக்கி வந்தது. அப்போது 8 மணி அளவில் பொம்மிடி அருகில் வந்தபோது, அந்த ரெயிலில் முன்பதிவு இல்லா பெட்டியின் படிக்கட்டு பகுதியில் நின்ற பெண் ஒருவர். திடீரென தவறி கீழே விழுந்தார்.

இதை பார்த்த அந்த பெண்ணின் கணவர், அங்கிருந்த சக பயணிகள் உடனடியாக ரெயிலில் இருந்த அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தி னர். பின்னர் அவர்கள் கீழே இறங்கி சென்று பார்த்தபோது, அந்த பெண் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து சேலம் நோக்கி புறப்பட்டது.

தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இறந்துபோன பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், இறந்துபோன பெண், நேபாளம் நாட்டை சேர்ந்த கல்பனா (வயது 35) என்பது தெரியவந்தது. இவர், தனது கணவர், மகனுடன் ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பூர் செல்வதற்காக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லா பெட்டியில் ஏறி பயணம் செய்ததும், அவர் ரெயிலில் கழிவறைக்கு செல்லும் பகுதியில் ஓரமாக நின்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து பலியாகி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.