தமிழக செய்திகள்

சேலம்: ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு

7 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு ரெயிலில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடி விட்டார்.

தர்மபுரி,

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மணி கண்டன் (வயது 35). இவருடைய மனைவி சிவரஞ்சனி (26). இவர்கள் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து தங்கள் 5 வயது மகளின் மருத்துவ சிகிச்சைக்காக யஸ்வந்தபுரம்-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவைக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த ரெயில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சென்று கொண்டிருந்தது. அந்த பகுதியில் இந்த ரெயில் மிகவும் மெதுவாக சென்றது. ரெயிலில் சிவரஞ்சனி இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அருகே வந்த மர்மநபர் சிவரஞ்சனியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு ரெயிலில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடி விட்டார். இதனால் சிவரஞ்சனி கூச்சலிட்டார். இதனால் அந்த பெட்டியில் சென்ற பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சேலம் ரெயில் நிலையத்தில் போலீசாரிடம் புகார் அளிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் தனிப்படை அமைத்து இந்த நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை வலை வீசி தேடி வருகிறார்கள்.