தமிழக செய்திகள்

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தால் விற்பனை மந்தம்: நகை உற்பத்தி பாதிப்பால் முடங்கிய பட்டறைகள்

கோவை பகுதியில் தங்க நகை பட்டறைகளில் தயாரிக்கப்படும் நகைகளுக்கு, இந்திய அளவில் நல்ல மதிப்பு இருந்து வருகிறது.

கோவை,

தொழில் நகரமான கோவை தங்க நகை தொழிலிலும் சிறந்து விளங்கி வருகிறது. தங்க நகை தயாரிப்பில் மும்பை, கொல்கத்தாவிற்கு அடுத்த இடத்தில் கோவை உள்ளது. தங்க நகை தொழிலை சார்ந்து கோவையில் 40 ஆயிரம் நகை பட்டறைகள், 1 லட்சம் பொற்கொல்லர்கள், முதன்மை நகை தயாரிப்பாளர்கள் என நேரடியாக 1 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

கோவையில் ஆண்டுக்கு சுமார் 100 டன் தங்க நகைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கோவை பகுதியில் தங்கநகை பட்டறைகளில் தயாரிக்கப்படும் தங்க நகைகளுக்கு, இந்திய அளவில் நல்ல மதிப்பு இருந்து வருகிறது.

இதனிடையே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.13,950 ஆகவும், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,11,600 ஆகவும் இருந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை சற்றே சரிவை சந்தித்தாலும், மீண்டும் தங்கம் விலை உயர வாய்ப்பிருப்பதாக தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வாங்குபவர்களின் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி விற்பனை மந்தமாகி உள்ளது. நகை, ஏற்ற இறக்கத்தால் வழக்கமான விற்பனையைவிட 70 சதவீதம் குறைந்துள்ளது. நகை வியாபாரம் குறைந்ததால் தயாரிப்புக்கான ஆர்டரும் குறைந்துள்ளது.

போதிய ஆர்டர்கள் இல்லாமல் தங்க நகை பட்டறைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் போதிய வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளனர். வேலையிழப்பு காரணமாக கோவையை சேர்ந்த தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் இத்தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து நகைப்பட்டறை உரிமையாளர்கள் கூறியதாவது:-

தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தின் காரணமாகவே ஆர்டர்கள் குறைந்துள்ளன. முன்பு ஒரு மாதத்திற்கு கிலோ கணக்கில் தங்க நகைகளை உற்பத்தி செய்து கொடுத்து வந்த நிலையில், தற்போது மிகவும் குறைந்த ஆர்டர்கள் வருகின்றன. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை அளிக்க முடியாத நிலை உள்ளது. ஒரு நகைப்பட்டறையில் 10 பேர் வேலை செய்த நிலையில், தற்போது 4 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர்.

அவர்களுக்கும் முறையாக வேலை தர முடிவதில்லை. போதிய வருமானம் இல்லாததால் பலரும் வேறு வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்வதாலும் நகை வாங்குபவர்கள் தயங்குகின்றனர். மேலும் மக்களின் தங்கம் வாங்கும் திறன் குறைந்து வருகிறது. தங்கம் தொடர் விலையேற்றம் கண்டு வந்தால், தங்க நகை பட்டறைகள் வேலை இன்றி படிபடிப்யாக மூடப்படும் சூழல் உருவாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.