தமிழக செய்திகள்

உப்பு உற்பத்தி அதிகரித்து விலை சரிந்தது... உற்பத்தியாளர்கள் வேதனை

மிக குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதால் பல்வேறு உற்பத்தியாளர்கள் பணிகளை நிறுத்த தொடங்கியுள்ளனர்.

நாகை,

உப்பு உற்பத்தி அதிகரித்து விலை குறைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

உப்பு உற்பத்தி அதிகரிப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பை உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வேதாரண்யத்தில் 300 டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

உற்பத்தியாளர்கள் வேதனை

இதுவரை 10 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு இடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. வியாபாரிகள் உப்பை அதற்கு தகுந்த விலைக்கு கேட்காமல் ஒரு கிலோ 60 பைசாக்கு கேட்பதால் உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். மின்சார கட்டணம் தொழிலாளர்கள் சம்பளம் என பிற இதர செலவுகளுக்காக உப்புக்கு குறைந்தபட்சம் ஒரு ரூபாய் கிடைத்தால்தான் ஈடுகட்டமுடியும். குறைந்த விலைக்கு விற்பனை செய்தால் செலவை ஈடுகட்ட முடியாத சூழல் ஏற்படும் என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உப்பு உற்பத்தி அதிகமாக உள்ளதால் வியாபாரிகள் குறைந்த விலைக்கே உப்பை வாங்குவதற்கு முன்வருகின்றனர். இதனால் மின்சார கட்டணம் கட்டுவதா? தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதா? எனும் சிக்கலான சூழ்நிலை ஏற்படுவதாக உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதன் காரணமாக பல்வேறு உற்பத்தியாளர்கள் பணிகளை நிறுத்த தொடங்கியுள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் உப்பு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT