சென்னை,
தமிழ்நாடு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கிணங்க நடப்பு 2026-2027 ஆம் ஆண்டில், சம்பா நெற்பயிர்காப்பீட்டிற்கான காலவரம்பு 01.12.2026 வரை நீட்டிப்பு சம்பா பருவ நெற்பயிரை விவசாயிகள் நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்து கொள்ள வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
2026-2027 ஆம் ஆண்டில் நிலவும் எல் நினோ நிகழ்வின் தாக்கத்தால், தென்மேற்கு பருவமழை குறைவாக பெறப்பட்டதன் காரணமாக முக்கிய அணைகளில் போதிய நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து இல்லாத நிலை ஏற்பட்டது. எனினும், ஆகஸ்ட் மாத இறுதியில் மேட்டூர் அணையில் போதுமான நீர் வரத்து இருந்ததால், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சம்பா நெல் சாகுபடிக்கு தேவையான பாசன வசதியை உறுதி செய்யும் வகையில்,தமிழ்நாடு முதல்-அமைச்சரால் மேட்டூர் அணை திறந்து வைக்கப்பட்டது.
மேலும், வடகிழக்குப் பருவ மழை அக்டோபர் 15ஆம் தேதி முதல் பரவலாக பெய்து வருவதால், இயல்பாக ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திலிருந்து மேற்கொள்ளப்படும் சம்பா நெல் சாகுபடியை விவசாயிகள் செப்டம்பர் இறுதியிலிருந்து தான் முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசின் தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்திலும் விவசாயிகள் உரிய காலத்திற்குள் எளிதாக காப்பீடு செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் சம்பா நெற்பயிர் சாகுபடி தாமதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு, 2026-2027 சம்பா பருவ காப்பீட்டிற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு விவசாயிகள் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கையினை ஏற்று, தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட தொடர்முயற்சியால் சம்பா! தாளடி பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை 01.12.2026 வரை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே, அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 1-ம் தேதிக்குள் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொள்கிறது.
நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏற்கெனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் இப்பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் தங்கள் மாவட்டங்களில் அறிவிக்கை செய்த பகுதிகளில் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்து பயனடையுமாறு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.