தமிழக செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் சாம்பார் வெங்காயம் விலை அதிரடி உயர்வு; கிலோ ரூ.120-க்கு விற்பனை - இல்லத்தரசிகள் அதிர்ச்சி

விலை உயர்வால், வெளிச்சந்தையில் சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சாம்பார் வெங்காயம் விலை கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் தினசரி சமையலுக்கு பயன்படும் முக்கிய பொருளாக சாம்பார் வெங்காயம் உள்ளது. சாம்பார் வெங்காயம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சாம்பார் வெங்காயம் விலை அதிரடியாக உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் வெங்காயம் மொத்த வியாபாரிகள் சங்கத்தலைவர் வி.ஆர். சவுந்தரராஜன் கூறும்போது, சாம்பார் வெங்காயம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், தாராபுரம், பல்லடம், உடுமலை உள்ளிட்ட திருப்பூர் மாவட்ட பகுதிகளிலும் அதிகளவில் விளைகிறது.

வரத்து குறைவு

இந்த நிலையில், மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சாம்பார் வெங்காயம் வரத்து குறைந்து உள்ளது. வழக்கமாக 20 லாரிகளில் சாம்பார் வெங்காயம் வரத்து இருக்கும். ஆனால், தற்போது 10 முதல் 12 லாரிகள் தான் வருகிறது. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுதபூஜைக்கு பிறகு படிப்படியாக விலை உயர்ந்து சாம்பார் வெங்காயம் ரூ.100 முதல் ரூ.120 வரைக்கும் விற்பனையாகிறது.

அதே போன்று, பச்சை பட்டாணி மற்றும் பீன்ஸ் விலையும் உயர்ந்துள்ளது. பீன்ஸ் கிலோ ரூ.90, பச்சை பட்டாணி கிலோ ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது என அவர் கூறினார். விலை உயர்வால், வெளிச்சந்தையில் சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT