சென்னை,
தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் மாற்றுப் பாலின மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் பிரம்மாண்டமான பேரணியினை உலகெங்கும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் 'தமிழ்நாடு வானவில் கூட்டணி' என்ற அமைப்பு ஆண்டுதோறும் ஜூன் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானவில் சுயமரியாதை பேரணியை நடத்தி வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டுக்கான 'வானவில் சுயமரியாதை பேரணி' சென்னையில் இன்று நடைபெற்றது. தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளான பறை இசை மற்றும் தப்பாட்ட முழக்கங்களுடன் பேரணி உலாவந்தது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கி, சிந்தாதிரிப்பேட்டை லேங்க்ஸ் தோட்ட சாலை சந்திப்பில் பேரணி நிறைவடைந்தது.
இதில், திருநர் உரிமைகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் மூலம் தீங்கு விளைவிக்கும் அம்சங்களை நீக்கும் வகையில் மாநில விதிகளைத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தின் பெயரைத் திருநர் நலவாரியம் என மாற்ற வேண்டும் உள்ளிட்ட 21 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.இந்த பேரணியில் பங்கேற்ற அனைவரும் "எங்கள் பாலினம் எங்கள் உரிமை" என்றும் முழக்கங்களை எழுப்பினர்.
இதில் வானவில்லின் ஏழு வண்ணக் கொடிகள் மற்றும் குடைகளை ஏந்தியபடியும், விழிப்புணர்வுப் பதாகைகளைத் தாங்கியபடியும் சென்னை மட்டுமின்றி, பிற மாநிலங்கள் சேர்ந்தவர்கள் பலரும் பங்கேற்றனர். இவர்களோடு மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களும் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கலந்துகொண்டனர்.