சென்னை,
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் கேந்திரிய வித்யாலயா சங்கதன் (கே.வி.எஸ்.) பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகள் சார்பில் சமீபத்தில் வெளியான அறிவிப்பில், 3-வது மொழியை தேர்ந்தெடுப்பது தொடர்பாக மாணவர்களிடமும், பெற்றோரிடமும் கருத்துகளை பெறும் பணிகளை அனைத்து பள்ளிகளும் ஏற்கனவே நிறைவு செய்திருக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அனைத்து பள்ளிகளிலும் 2026-27-ம் கல்வியாண்டு முதல் மும்மொழிக் கொள்கையின் கீழ் 6 மற்றும் 9-ம் வகுப்புகளில் குறைந்த ஒரு சமஸ்கிருத பிரிவு கட்டாயம் இருக்க வேண்டும் என்று கேந்திரிய வித்யாலயா அறிவித்துள்ளது. வகுப்புகளில் பிரிவுகள் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல்களையும் கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதில், 'ஒரே மொழியை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள், வகுப்புகள் சீராக நடைபெறுவதற்காக ஒரே பிரிவில் வைக்கப்பட வேண் டும். சமஸ்கிருதம் மற்றும் வட்டார மொழிக்கு என தனித்தனி குழுக்கள் உருவாக்கப்படலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட மொழியைப் படிக்க குறைந்தது 15 மாணவர்கள் இருக்க வேண்டும்.
ஒரு பிரிவு சமஸ்கிருதத்திற்கும், மற்றொரு பிரிவு வட்டார மொழிக்கும் ஒதுக்கப்படலாம். மாணவர்கள் தேர்ந்தெடுத்த எண்ணிக்கையின் அடிப்படையில் சமஸ்கிருதம் மற்றும் வட்டார மொழிப்பிரிவுகளை பள்ளியின் முதல்வர்கள் தீர்மானிக்கலாம். ஆனால், எந்தச் சூழலிலும் குறைந்தது ஒரு சமஸ்கிருதப்பிரிவு இருப்பது கட்டாயமாகும்' என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக கே.வி.எஸ். மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் 'மாணவர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப சமஸ்கிருதம் அல்லது வட்டார மொழியைத் தேர்வு செய்து கொள்ளலாம். எனினும், இடமாற்றம் பெறக்கூடிய மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தது ஒரு சமஸ்கிருத பிரிவாவது இருக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. என்றார்.