தமிழக செய்திகள்

எதிர்பாராத கூட்டணியை அமைக்கும் சசிகலா: ஆதரவாளர்களை களம் இறக்க திட்டம்

சசிகலாவின் ஆதரவாளர்கள் அண்ணா நினைவிடத்தில், "வருகிற தேர்தலில் உங்கள் தலைமையில் துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் பாடம் புகட்டுவோம், தேர்தலை சந்திப்போம்" என்று உறுதிமொழி ஏற்றனர்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி, நேற்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடைய ஆதரவாளர்கள் அங்கு, "வருகிற தேர்தலில் உங்கள் (சசிகலா) தலைமையில் துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் பாடம் புகட்டுவோம், தேர்தலை சந்திப்போம்" என்று உறுதிமொழி ஏற்றனர். இதுகுறித்து சசிகலாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, "மக்களாட்சியை கொண்டுவர என்னால் என்ன செய்ய முடியுமோ, அதை நான் செய்வேன்" என்று கூறினார்.

இதனால், சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, சசிகலா புதிய அரசியல் கட்சியை தொடங்கி, யாருடனாவது கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பார் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்தபோது பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதாவது, தென் மாவட்டங்களில் உள்ள தனது சமூக வாக்குகளை ஒருங்கிணைத்து செல்வாக்கை நிரூபிக்கவும், தனது அக்காள் மகன் டி.டி.வி.தினகரனுக்கு அரசியல் ரீதியாக முட்டுக்கட்டை போடவும் அவர் வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் நெருங்கிவிட்டதால், புதிய கட்சியை தொடங்குவதற்கு பதிலாக திவாகரன் தொடங்கிய அண்ணா திராவிடர் கழகம் என்ற அமைப்புக்கு மீண்டும் உயிர் கொடுத்து, அதன் மூலம் தேர்தலை சந்திக்க சசிகலா திட்டமிட்டிருப்பதாகவும், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கிவிட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தனது ஆதரவாளர்களை தேர்தலில் களம் இறக்கவும் சசிகலா திட்டமிட்டுள்ளாராம்.

SCROLL FOR NEXT