தூத்துக்குடி,
சாத்தான்குளம் அருகே பாதை தொடர்பான இடப்பிரச்சினையில் விவசாயியை கல்லால் தாக்கி கொலை செய்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை கீழ் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் கொம்பையா(எ) கணேசன் (வயது 65). விவசாயியான இவருக்கு மனைவி லட்சுமி மற்றும் மகன் முத்துராமன் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆன நிலையில், மகள்கள் வேறு ஊரில் வசித்து வருகின்றனர். மகன் அதே ஊரில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார்.
கொம்பையாவுக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான ஆழ்வார் மகன் ஆறுமுகம்(42) என்பவருக்கும் அதே தெருவில் உள்ள சந்துப்பாதை தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கொம்பையாவுக்கும், ஆறுமுகத்திற்கும் அந்தப் பாதை தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம், அங்கு கிடந்த பெரிய கல்லை எடுத்து கொம்பையாவைத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கொம்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆறுமுகத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம் டி.எஸ்.பி. செல்வராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் மருதுபாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.