தமிழக செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு: தண்டனையை உறுதி செய்யக்கோரி சிபிஐ மனு

வழக்கின் முக்கியத்துவம் கருதி ஜூன் 4-ம் தேதி முதல் தினசரி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்

மதுரை,

சாத்​தான்​குளத்​தில் செல்​போன் கடை நடத்தி வந்த ஜெய​ராஜ், அவரது மகன் பென்​னிக்ஸ் ஆகியோர், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலகட்டத்தில் 2020 ஜூன் 19-ல் போலீ​சாரால் விசா​ரணைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டு, பின்​னர் உயி​ரிழந்​தனர்.

இந்த சம்​பவம் தொடர்​பாக, சிபிஐ கொலை வழக்​குப் பதிவு செய்து காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்​வாளர்​கள் பால​கிருஷ்ணன், ரகு​கணேஷ், தலை​மைக் காவலர் முரு​கன், காவலர்​கள் சாமதுரை, முத்​து​ராஜா, செல்​லதுரை, தாமஸ் பிரான்​சிஸ், வெயிலு​முத்து ஆகிய 9 பேரை கைது செய்​தனர்.

இந்த வழக்​கை, மதுரை முதலா​வது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றம் விசா​ரித்​தது. விசா​ரணை முடிந்த நிலை​யில், காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேருக்​கும் தூக்​குத் தண்டன விதித்​து, ஏப்​ரல் 6-ம் தேதி நீதிபதி தீர்ப்​பளித்​தார்.

இந்த தூக்குத் தண்​டனையை உறுதி செய்​யக் கோரி, தமிழக அரசு மற்​றும் சிபிஐ தரப்​பில் மதுரை ஐகோர்ட்டு அமர்​வில் மனுத்​தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இந்தநிலையில், சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 9 குற்றவாளிகளும் மேல்முறையீட்டு மனுக்களை ஜூன் 1ம் தேதிக்குள் தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வழக்கின் முக்கியத்துவம் கருதி ஜூன் 4ம் தேதி முதல் தினசரி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் ஆனந்த் வெங்​கடேஷ், ராம கிருஷ்ணன் அமர்வு அறிவித்துள்ளனர்.

விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி சிபிஐ தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனையை உறுதிப்படுத்த கோரிய மனுவின் விசாரணை ஜூன் 4-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே குற்றவாளியான முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், 15 நாட்கள் பரோல் விடுப்பு கோரிய மனுவையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.