சென்னை,
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் தாயார் கமலா, வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சவுக்கு சங்கரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
யூடியூபர் சவுக்கு சங்கரின் தாயார் கமலா அம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். தனது மகன் திமுக அரசை எதிர்த்து பேசிய ஒரே காரணத்திற்காக, கமலா அம்மாள் திமுக அரசின் காவல்துறையால், திமுக மற்றும் கூட்டணி கட்சி குண்டர்களால் சந்தித்த துயரங்கள் ஏராளம்.
வயதான தாய் என்று கூட பாராமல் அவரும் கடும் துயருக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டார். இந்நிலையில், கமலா அம்மாள் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. பாசமிகு தாயாரை இழந்து வாடும் சவுக்கு சங்கருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த கமலா அம்மாளின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
பிணை நிபந்தனைகளை மீறிய வழக்கில் தலைமறைவு ஆகியிருந்த சவுக்கு சங்கர் கடந்த வாரம் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னை புழல் சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார்.