கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சேலம் மாநகராட்சியில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டம்

சேலம் மாநகராட்சிக்கு எம்/எஸ். சூயஸ் பிராஜெக்ட் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கும் இடையே 19.06.2026 அன்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்திரவின் பேரில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டம்.

24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம்

சேலம் மாநகராட்சியில் குடிநீர் உட்கட்டமைப்புகளை சீரமைப்பு செய்தும், புதிய உட்கட்டமைப்புகளை உருவாக்கியும், சேலம் மாநகரில் வசிக்கும் 10,83,506 மக்கள் பயன்பெறும் வகையில் மாநகரம் முழுவதும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அரசாணை எண். (MS.) N0.39 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை. நாள்: 06.03.2024-ன்படி மதிப்பீட்டு தொகை ரூ.758.13 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

ஏற்பளிப்பு கடிதம்

அதன்படி, ஒப்பந்தப்புள்ளி கோரி பல கட்டங்களில் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு குறைந்தப்பட்ச ஒப்பந்த புள்ளி அளித்த எம்/எஸ். சூயஸ் பிராஜெக்ட் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் (M/S.SUEZ Project International Private Limited) என்ற நிறுவனத்தின் மூலம் இத்திட்டத்தினை நிறைவேற்ற சேலம் மாநகராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றியதன் பேரில், மேற்படி நிறுவனத்திற்கு ஏற்பளிப்பு கடிதம் 09.02.2026 அன்று வழங்கப்பட்டது.

அரசாணை வெளியிடப்பட்டது

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் இத்திட்டத்திற்கான திருத்திய மதிப்பீட்டின்படி ரூ.1035.61 கோடிக்கான திருத்திய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான அரசாணை எண். G.O. (4D) N0.16 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MC5) துறை நாள்: 04.06.2026 அன்று வெளியிடப்பட்டது. மேற்காணும் தொகையில் ரூ.227.44 கோடி இந்திய அரசால் அம்ரூட்-2.0 திட்டத்தின் கீழும், ரூ.393.92 கோடி தமிழ்நாடு மாநில அரசால் பங்களிப்பு செய்யவும், மீதமுள்ள ரூ.414.25 கோடி தொகை இத்திட்டத்தினை செயலாக்கம் செய்ய தெரிவு செய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் பங்களிப்பு செய்யவும் வகை செய்யப்பட்டுள்ளது.

பணிகள்

மேற்படி அரசாணையின்படி சேலம் மாநகராட்சிக்கு எம்/எஸ். சூயஸ் பிராஜெக்ட் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் (M/S.SUEZ Project International Private Limited) என்ற நிறுவனத்திற்கும் இடையே 19.06.2026 அன்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. சேலம் மாநகரில் இத்திட்டத்தினை செயல்படுத்திட ஏதுவாக தற்போது உள்ள குடீநீர் சம்பந்தமான உட்கட்டமைப்பு வசதிகளை முதல் வருடத்தில் ஆய்வு செய்து அடுத்துள்ள நான்கு ஆண்டுகளில் குடிநீர் திட்டம் தொடர்பான தற்போது உள்ள உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடவும், புதிய வசதிகள் ஏற்படுத்திடவும், ரூ.1035.61 கோடி மதிப்பீட்டிலான பணிகளை ஒப்பந்த நிறுவனம் மேற்கொள்ளும்.

குடிநீர் விநியோகம்

மேலும் இத்திட்டத்தினை இந்நிறுவனம் மூலமாக அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொடர் பராமரிப்பு பணிகள் 3259.73 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இப்பராமரிப்பு காலத்தில் குடிநீர் விநியோகத்தினை திறன்மிக்க வகையில் கையாளவும், குடிநீர் விநியோகம் தொடர்பான பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் களையவும், உட்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை இந்நிறுவனம் சிறப்பான முறையில் மேற்கொள்வதை உறுதி செய்யவும் இலக்குகள் நிர்ணயித்து செயல்படுத்திட இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது

மேற்கண்டவாறு, இத்திட்டத்தினை செயலாக்கம் செய்திட ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை., ப. மதுசூதன் ரெட்டி, நகராட்சி நிர்வாக இயக்குனர் சிம்ரன்ஜித் சிங் காலோன், தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் மற்றும் பியாரே பவுலியாக் நிர்வாக துணை தலைவர் எம்/எஸ். சூயஸ் பிராஜெக்ட் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் (M/S.SUEZ Project International Private Limited) ஆகியோரது முன்னிலையில் லலித்ஆதித்ய நீலம் , சேலம் மாநகராட்சி ஆணையாளர், ரஸ்மி ரஞ்ஜன்ரே, தலைமை நிர்வாக அலுவலர், எம்/எஸ். சூயஸ் பிராஜெக்ட் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் (M/S.SUEZ Project International Private Limited) 19.06.2026 அன்று தலைமை செயலகத்தில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.