சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய விமான நிலையங்களை ஒரு மாதத்திற்கு முன்பே மூடியிருந்தால் இந்தியாவில் கொரோனா நுழைந்திருக்காது. டெல்லியில் கடந்த மார்ச் 8-ந்தேதி நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முன்கூட்டியே தடை விதித்திருந்தால் இன்றைய பாதிப்பில் பெருமளவு குறைக்கப்பட்டிருக்கும். இதற்கு மத்திய பா.ஜ.க. அரசுதான் பொறுப்பே தவிர, மத்திய அரசு அனுமதியோடு மாநாடு நடத்திய தப்லிக் ஜமாத் அல்ல. கொரோனா வைரசுக்கு மதசாயம் பூசுபவர்கள் அந்த வைரசை விட கொடியவர்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 26 மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பா.ஜ.க. அரசின் அப்பட்டமான, பாரபட்சமான போக்கை புரிந்துகொள்ளலாம்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர்களோடு காணொலி காட்சி மூலம் கலந்துரையாடிய சில கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். அதில் கொரோனா வைரஸ் ஒழிப்பில் முக்கிய கவனம் செலுத்தவேண்டியதில் பரிசோதனையும், தடுப்பு நடவடிக்கையும் ஆகும் என்று குறிப்பிட்டிருக்கிறார். உலகத்திலேயே பரிசோதனை விகிதம் இந்தியாவில் குறைவாக இருக்கிறது.
ஊரடங்கு காலமான 3 மாத காலத்திற்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை நேரடியாக, ரொக்கமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.