தமிழக செய்திகள்

22-ந்தேதி முதல் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் - பள்ளி கல்வித்துறை உத்தரவு

ஒருமுறைக்கு இருமுறை உறுதிசெய்து கொண்டு உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பிளஸ்-2 வகுப்பு பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 22-ந்தேதி முதல் (வியாழக்கிழமை) 31-ந்தேதி (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் https://dgeapp.tnschools.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மாணவர்களுடைய விவரங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக சில அறிவுறுத்தல்களையும் பள்ளிகளுக்கு வழங்கியுள்ளது.

மருத்துவ சான்றிதழ்

அதன்படி தமிழில் உள்ள மாணவர்களின் பெயர். பெற்றோரின் பெயர் அல்லது பாதுகாவலரின் பெயரை திருத்தம் செய்ய வேண்டும் எனில், ஏற்கனவே உள்ள பெயரை முழுவதும் நீக்கம் செய்த பின்பு திருத்தம் மேற்கொள்ள வேண்டும். சலுகை கோரும் மாற்றுத்திறனாளி மாணவரின் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அல்லது உரிய டாக்டரிடம் பெற்ற மருத்துவ சான்றிதழை 'ஸ்கேன்' செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

உறுதிமொழி படிவம்

ஒவ்வொரு மாணவரின் உறுதிமொழி படிவத்தை பதிவிறக்கம் செய்து சரிபார்த்த பின்னரே தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம் செலுத்திய பின்னர் மாணவர்களின் விவரங்களின் திருத்தங்கள் மேற்கொள்ள இயலாது. உறுதி மொழி படிவத்தில் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர். பள்ளி தலைமை ஆசிரியர் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை உறுதிசெய்து கொண்டு உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிட வேண்டும்.

முழுப்பொறுப்பு

பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களில் தவறுகள் ஏதேனும் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியரே முழுப்பொறுப்பேற்க நேரிடும் என்பதுடன் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்பது உள்ளிட்ட பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT